கோவா தமிழ் சங்கம் 1968 ஆம் ஆண்டு சிலம்பு செல்வர் ம.பொ.சி அவர்களின் வழிகாட்டுதலின் படி திரு. ராமமூர்த்தி அவர்கள் தலைவராகவும் திரு பாலசுப்பிரமணியன் துணைத் தலைவராகவும் திரு லோகேஷ் செயலாளராகவும் கொண்டு துவக்கப்பட்டது.
கோவாவில் சுமார் 10,000 தமிழ் குடும்பங்கள் புலம்பெயர்ந்து வசிக்கின்றனர் .பல்வேறு தொழில்களிலும் அரசு மற்றும் தனியார் பணிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் பணிபுரிகின்றனர். மீன்பிடித் தொழிலில் ஏராளமான தமிழ் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். கோவா தமிழ் சங்கம் இங்கு வாழும் தமிழர்களின் கலை, பண்பாடு, கல்வி, நிகழ்வுகளுக்கான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.
கோவா தமிழ் சங்கத்தின் நிர்வாக குழு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறது. மாநிலத்தில் ஒரே சங்கமாக ஜாதி சமய மத வேறுபாடு இன்றி ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறது. திரு. ர. பழனிச்சாமி, தலைவர், திரு. சே.குமார், துணைத் தலைவர், திரு. ச. சிவராமன், பொதுச்செயலாளர், திரு.அ.செல்வன் ஜெபராஜ், பொருளாளர், திரு.வே. சிதம்பரம், திரு. த. கலைச்செல்வன், இணைச் செயலாளர்கள் தற்போது உள்ளனர். நிர்வாகத்திற்கென ஐந்து கிளைகளையும் கிளைக்கு ஒரு செயலாளரும் செயற்குழு உறுப்பினர்களும் இடம் பெற்று இருக்கின்றனர்.
2015 ஆம் ஆண்டு தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் வெள்ள பாதிப்பிற்கு நிவாரணமாக அத்தியாவசிய பொருட்கள் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் 500 குடும்பங்களுக்கு 1000 மதிப்புள்ள தொகுப்பு பொருள்களாக பல இடர்ப்பாடுகள் நடுவே நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு களப்பணி செய்து வினியோகித்தோம்.
2019 ஆம் ஆண்டு தனது ஐம்பதாவது பொன் விழாவை நிறைவு செய்தது. கொரோனா பெருந்தொற்று காரணமாக 2022 ஆம் ஆண்டு பொன்விழா நிறைவை கொண்டாடினோம். 2021 ஆம் ஆண்டு பாரதியார் நூற்றாண்டு விழா பாரதமெங்கும் பாரதி என்ற தலைப்பில் டிசம்பர் மாதம் கோவா மாநில ஆளுநர் மேதகு ஸ்ரீதரன் பிள்ளை அவர்கள் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கோவாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை தமிழர் பண்பாட்டை போற்றும் வகையில் கலைஞர்களைக் கொண்டும், உறுப்பினர்கள், குழந்தைகளாலும் நிகழ்த்தப்படுகிறது. நமது குழந்தைகள் 10ஆம், 12 ஆம் வகுப்புகளில் முதல் மதிப்பெண் பெறுபவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. பல்வேறு சமூக பணிகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்குகிறோம். ஐயன் வள்ளுவரின் சிறப்பை போற்றும் வகையில் மணற்
சிற்பம் அனைத்திந்திய தமிழ் சங்கங்களுடன் கோவா தமிழ் சங்கமும் இணைந்து பல்வேறு இந்திய கடற்கரைகளிலும், சிறப்பான கோவா கலங்கோட் கடற்கரையிலும் புகழ் பெற்ற பத்மஸ்ரீ விருத்தாளர் ஒடிசா சுதர்சன் பட்நாயக் அவர்களால் 2018 ஆம் ஆண்டு எழுப்பப்பட்டது. 2018 ஆம் ஆண்டு புயலால் திசை மாறி கோவா வாஸ்கோடகாமா துறைமுகத்தில் கரையொதுங்கிய நூத்தி முப்பது மீனவர்களுக்கு கோவா தெற்கு மாவட்ட நிர்வாகத்துடனும் தமிழக அரசுடனும் இணைந்து அவர்களுக்கு தேவையான உணவு ஏற்பாடுகளும், தமிழகம் திரும்பவும் வசதிகள் செய்து தரப்பட்டது.
தமிழ்நாட்டு சிலம்ப கழகத்துடன் இணைந்து கோவாவில் அனைத்திந்திய சிலம்பப் போட்டிகள் 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். பொருளாதாரத்தால் நலிவுற்று வாழும் உறுப்பினர்களுக்கு உறுப்பினர்களின்
உதவியோடும் நிதி உதவிகளும் பொருளாதார உதவிகளும் வழங்கி வருகிறோம். பள்ளி கட்டணம் செலுத்த இயலாத ஏழை மாணவர்களுக்கு உறுப்பினர்களின் பங்களிப்போடு கல்வி கட்டணங்கள் செலுத்தி வருகிறோம் .ரத்த வங்கிகளுடன் இணைந்து ரத்ததான முகாம்கள், மருத்துவ முகாம்கள், நமது பாரம்பரிய வைத்தியமான சித்தவைத்திய முகாம்கள் நடத்தி மருத்துவ ஆலோசனைகளும் மருந்துகளும் தேவைப்படுவோருக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. தற்போது தமிழக அரசின் தமிழக இணைய கல்வி கழகத்துடன் இணைந்து வருங்கால சந்ததியினருக்கு தமிழ் மொழியினை கற்றுக்கொடுக்கும் தமிழ் வகுப்புகளை நடத்தி வருகிறோம்.
கோவா தமிழ்ச் சங்கத்திற்கென சொந்த இடம் வாங்கப்பட்டுள்ளது அங்கு அழகான அலுவலக கட்டிடமும் கலையரங்கமும் கட்ட முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம் அங்கு தமிழ் கல்விக்கென ஒரு வகுப்பறையும் தமிழகத்திலிருந்து வரும் விருந்தினர்களுக்கு தங்கி செல்லும் வகையில் விடுதி அறைகளும் கட்டுவதற்கு திட்டங்கள் இடப்பட்டு இருக்கிறது அனைத்திந்திய தமிழ் சங்க பேரவையுடன் இணைந்து செயல்படுவதோடு தமிழர்கள் நலன், தமிழ் மொழி காக்க என்றென்றும் பாடுபடுவோம்.